மேற்கு வங்கத்தில் இரண்டாது முறையாக முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.
மொத்தமுள்ள 294 இடங்களில் 211 ஐ கைப்பற்றியது. பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில், நேற்று 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவையில் 41 பேர் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தாவில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழா முடிவடைந்தவுடன் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மம்தா.
மாநில அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா கூறுகையில், ‘‘இடைக்கால நிவாரணமாக மாநில அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள். இந்த அறிவிப்பின் மூலம் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவாகும்’’ என்றார்.
மேற்கு வங்கத்தில் மத்திய அரசு ஊழியர்களை காட்டிலும் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. அகவிலைப்படியில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு வேறுபாடு உள்ளது. இதை களையும் நோக்கில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவியேற்றவுடன் அரசு ஊழியர்களுக்கு மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்திருப்பது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment