பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்திலும் விருதுநகர் மாநில அளவில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கல்வித்துறை அதிகாரிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் 1985ல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ச்சியாக 26 ஆண்டாக மாநில முதல் இடத்தில் இருந்தது.
2011--2012ல் 93.53 தேர்ச்சி சதவீதத்துடன் மூன்றாமிடம், 2012--2013ல் 94.93 தேர்ச்சி சதவீதத்துடன் ஐந்தாம் இடம்,2013--2014ல் ஒருபடி முன்னேறி நான்காம் இடம்,2014--2015 ல் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு வந்தது.இந்தாண்டில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், 97.81 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு, கன்னியாகுமரியை தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு விருதுநகர் தள்ளப்பட்டது. விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் கல்வி மாவட்டங்களில் உள்ள 336 உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் 29,368 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 28,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 97.81 சதவீத தேர்ச்சியாகும். மாநில அளவில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் என முதல் மூன்று இடங்களை 11 மாணவர்கள் பிடித்திருந்தாலும், கடந்தாண்டை விட தேர்ச்சி 0.17 சதவீதம் குறைவு.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பாடவாரியாக கையேடு, 'சிடி' வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டும், முதலிடம் பிடிக்காதது கல்வித்துறை அதிகாரிகளிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி கூறுகையில்,“ வரும் கல்வியாண்டில் முதல் பருவத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களை கண்டறிந்து, பாட ஆசிரியர்கள் மூலம் சனிக்கிழமைதோறும் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .மாணவர்கள் ரெகுலராக பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, 100 சதவீத தேர்ச்சிக்கும் திட்டம் வகுக்கப்படும் ,”என்றார்.
No comments:
Post a Comment