மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த நிலையில், கடந்த 1-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வை முதல்கட்ட தேர்வாகவும், இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்காதவர்கள் ஜூலை 24-ம் தேதி நடக்கவுள்ள தேர்வை இரண்டாம் கட்ட தேர்வாகவும் கருதும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடப்பதால் அந்த மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதேபோன்று, தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல், ‘ரேங்க்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு அனுமதி அளிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தங்கள் உத்தரவை பிறப்பித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. மாநில அரசுகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தேசிய நுழைவுத்தேர்வு வழியாக மட்டுமே நடை பெற வேண்டும்.
2. தேசிய நுழைவுத்தேர்வு நடத்துவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சிறுபான்மை உரிமை பாதிக்காது. இடஒதுக்கீட்டையும் எந்த விதத்திலும் பாதிக்காது.
3. கடந்த 1-ம் தேதி நடந்த முதல்கட்ட நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் ஜூலை 24-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வில் பங்கேற்க முடியாது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கலாம். முதல்கட்ட தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் சரியாக தயாராகவில்லை என்று கருதும் பட்சத்தில் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், தனிச்சட்டம் மூலம் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, நேரடியாக கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. தற்போது கலந்தாய்வு மூலம் நேரடியாக மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க முடியாது. தேசிய நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment