இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன் கீழ், தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது என, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் உள்ள நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி., வகுப்பில் மொத்தம் மாணவர்களில், 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்.
அதன்படி, தலித், பழங்குடியினர், சமூக ரீதியில் பிற்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற சுயநிதியில் இயங்கும் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை, தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில், இலவசமாக நாளை மே, 3ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, மே மாதம், 18ம் தேதி மாலை, 5 மணிக்குள், குழந்தையின் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, பெற்றோரின் வருமானச் சான்று (2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்), ஜாதிச் சான்று நகல், 2 பிரதிகளுடன் தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும். தகுதியற்ற மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment