எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்தும் படி, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது. பிரதமர் ஒப்புதல் கிடைத்ததும், எம்.பி.,களின் சம்பள உயர்வு அறிவிப்பு நடைமுறைக்கு வரும். தற்போது, எம்.பி.,க்களுக்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பிற படிகளாக, 45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சம்பளம் போதாதென்றும், சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்தி வந்தனர்.
100 சதவீதம்
இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, பா.ஜ., - எம்.பி.,யான யோகி ஆதித்யநாத் தலைமையில் பார்லிமென்ட் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்தும் படி பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், எம்.பி.,க்களுக்கான சம்பளம், ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்; தவிர பிற படிகளும் அதிகரிக்கும். ஒட்டு மொத்தமாக, எம்.பி.,க்களுக்கு, மாதந்தோறும், 2.8 லட்சம் ரூபாய் கிடைக்கும். முன்னாள் எம்.பி.,க்களுக்கான மாத ஓய்வூதியம், 20 ஆயிரம்ரூபாயிலிருந்து, 35 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும்.
நன்னடத்தை...
இது குறித்து மூத்த எம்.பி.,க்கள் சிலர் கூறுகையில், 'எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களின் நன்னடத்தையை கருத்தில் வைத்து சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும்' என்றனர். எம்.பி.,க்களுக்கு சம்பளம் இரட்டிப்பாவது குறித்து, பி.ஆர்.எஸ்., சட்ட ஆராய்ச்சி எனப்படும், பொது ஆராய்ச்சி மையத் தலைவர் மாதவன் கூறியதாவது:எம்.பி.,க்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது; இருப்பினும் அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். டில்லியில், வசதி படைத்தோர் வசிக்கும் பகுதியில் வீடு ஒதுக்கும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும்; அதற்கு பதில், வீட்டு வாடகைப்படி அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வளவா?
எம்.பி.,க்களுக்கு, இதற்கு முன், 2010ல், சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. அப்போது, 16 ஆயிரத்திலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பார்லிமென்ட்டுக்கு செல்வதற்கான தினப்படி, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. தொகுதிப்படி, மாதத்துக்கு, 20 ஆயிரத்திலிருந்து, 45 ஆயிரம் ரூபாயாக ஆனது. பணியாளர், எழுதுபொருள் போன்ற செலவுகளுக்கான படி, 20 ஆயிரத்திலிருந்து, 45 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
உண்மை என்ன?
ஆமதாபாத் ஐ.ஐ.எம்., முன்னாள் இயக்குனர் ஜகதீப் சோகார் கூறியிருப்பதாவது:எம்.பி.,க்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் என்பது மிகவும் தவறான அர்த்தத்தை பிரதிபலிக்கும் வார்த்தையாக உள்ளது. எம்.பி.,க்களுக்கு, விமானம் மற்றும் ரயில்களில் அளிக்கப்படும் இலவச பயணங்கள், தலைநகர் டில்லியில் பிரதான பகுதியில் வீடு போன்ற எண்ணற்ற சலுகைகள், அவர்களின் சம்பளமாக கூறப்படுவதில்லை. இவற்றை சேர்த்தால், அவர்களுக்கு கிடைக்கும் தொகை, பல மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment