அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை வேட்பாளர் தேர்வின் போது வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வாய்ப்பு பெற்ற மு.சந்திரபிரபா மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பண்டிதன்பட்டியைச் சேர்ந்தவர் த.முத்தையா. இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி சந்திரபிரபா. எம்.ஏ., பி.எட்., பட்டதாரியான இவர், அதிமுகவில் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆவார். மேலும் அயன் நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவியாக 10 ஆண்டுகளாக உள்ளார்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் உள்ளார்.மிகவும் எளிமையான இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். 200-க்கும் மேற்பட்டவர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், இவர் உள்ளிட்ட மூவருக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நேர்காணலுக்குச் சென்ற சந்திரபிரபா, திருப்பாவைப் பாடலையொட்டி ஜெயலலிதாவைப் புகழ்ந்து ஒரு கவிதையை கிராமத்துப் பாணியில் அவர் முன்னிலையில் பாடியுள்ளார்.
இதனை கேட்ட ஜெயலலிதா வயிறு குலுங்க சிரித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு போடயிட வாய்ப்புக் கிடைத்தது. மாவட்டத்திலேய கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் (36,673 வாக்குகள் கூடுதலாகப் பெற்று) வெற்றி பெற்றுள்ளார். சந்திரபிரபா வெற்றி பெற்றாலே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக கட்சியினரிடையே பேசப்பட்டு வந்த நிலையில் மிக் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இவருக்கு கண்டிப்பாக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இவரது மாமனார் தங்கமணி, தாமரைக்கனி காலத்திலிருந்தே அதிமுகவில் உள்ளவர். அவருடன் இருந்து அதே மாதிரியாக உரிமையுடன் அரசியல் இன்று வரை செய்து வருகிறார்கள். மிகவும் அமைதலான, அடக்கமான, சத்தமிட்டு கூட பேசாத குடும்பம் என்ற பெயர் உள்ள மற்றும் கட்சியில் எல்லாராலும் அறியப்பட்ட இவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாக அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கையில் உள்ளார்கள்.
மேலும் முதல்வர் ஸ்ரீஆண்டாள் பிறந்த இடத்திற்கு சிறப்பு கொடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மந்திரி பதவி அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் என மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளும் மந்திரிகள் தொகுதிகளாக இருந்து முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், மாவட்டத்திலேயே பின்தங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னேற வழி வகை பிறக்கும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
No comments:
Post a Comment