நாட்டின் பல்வேறு சமூக விரோத குற்றங்களை நுட்பமாக ஆராய்ந்து, மக்களின் பொது வாழ்வு பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தின் வளமையை அதிகரிப்பதற்கு பெரும் பங்காற்றும் மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.,)யில் பணியாற்ற பலருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும்.
அதற்கு இத்துறையை பற்றியும், பணியிடங்கள், தகுதிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியம் தானே? இந்தியாவின் சி.பி.ஐ., அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ.,) முறையை ஒத்தது. புதுடில்லியை தலைமையகமாகக் கொண்டு, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
சிறப்பு அதிகாரம்
நாட்டின் முக்கிய குற்றங்கள், கொலைகள், ஊழல் விசாரணைகளில், உச்ச புலானாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. மாநில முதலவர்கள், அமைச்சர்கள், செயலாளர்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதிராக, ஊழல் தடுப்பு மற்றும் குற்ற வழக்குகள் தொடர சி.பி.ஐ.,க்கு சிறப்பு அதிகாரம் உண்டு.
பணியிடங்களும், நியமன முறையும்
சீனியர் போலிஸ் பணியிடங்கள்: இயக்குனர், சிறப்பு இயக்குனர், கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், டி.ஐ.ஜி., காவல்துறை கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், துணை காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்கள் நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ தேர்வு தொழில்நுட்ப ஆலோசகர் பிரிவு: நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு அடிப்படையில் பொறியியல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரிவில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வெளிநாட்டு வர்த்தக மற்றும் அந்நிய செலாவணி, வங்கி, வரி, காப்பீடு பிரிவு: மூத்த ஆலோசகர், ஆலோசகர், துணை ஆலோசகர், ஜூனியர் ஆலோசகர் போன்ற பதவிகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
எலக்ட்ரானிக் டேட்டா பிராசசிங்: சிஸ்டம் அனலிஸ்ட், சீனியர் சிஸ்டம் அனலிஸ்ட், புரோகிராமர், அசிஸ்டன்ட் புரோகிராமர் போன்ற பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இளநிலை அல்லது முதுநிலை பாடப் பிரிவில், கம்பியூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் போன்ற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ தேர்வு: கிளரிக்கல் பணியிடங்கள், கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள், சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்கள், தகுதி தேர்வு, நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
சி.பி.ஐ.,யில் பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கு, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகளை திறம்பட எழுதியிருக்க வேண்டியதும் அவசியம்.
மேலும் தகவல்களுக்கு: www.cbi.nic.in
No comments:
Post a Comment