தமிழக பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
சேலத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான மீள் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு பேசியது:
2015-16 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், மாவட்டம் தோறும் சென்று அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நேரில் சந்தித்து பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் எளிமையாக கற்று தேர்ச்சி பெறுவதற்காக கையேடு வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த காலாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் மீள் ஆய்வு நடத்தப்பட்டது.
கல்வித் தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் கூட்டுவதற்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டம் கடந்த ஆண்டில் 90 சதவீத அளவுக்கு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. வரும் கல்வியாண்டில் 95 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி விகிதத்தை எட்ட ஆசிரியர்கள் உறுதி தெரிவித்துள்ளனர் என்றார்.
கூட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 20 பேர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 26 பேர், 46 பட்டதாரி ஆசிரியர்கள், 95 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 26 பேர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment