மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த உள்நாட்டு, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் 11 ஆவது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை (நவ.7) நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 7 ஆயிரத்து 430 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது நாள் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க கடற்படை முன்னாள் துணை அட்மிரல் ஆன் எலிசபெத் ராண்டோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 4 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சுனில்காந்த் முஞ்ஞாலுக்கு டி.லிட் சிறப்புப் பட்டம் வழங்கப்படுகிறது.
பல்வேறு துறை சார்ந்த 60 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். தேர்வில் சிறப்புத் தகுதி பெற்ற 235 மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற உள்ளனர். பார்வையிழந்த 36 மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர் படிப்புக்கான இளநிலை பி.எட் பட்டமும், இருவர் முதுநிலை எம்.எட் பட்டமும் பெறுகின்றனர்.
மாணவர்களின் கல்வித்திறன், ஆராய்ச்சித் திறனை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தி வரும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தற்போது பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெற்ற ரூ.85 கோடி நிதியுதவியுடன் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி,மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் ஆற்றலை மேலும் ஊக்குவிக்க பல்வேறு உள்நாட்டு, பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பல்கலைக்கழகப் பதிவாளர் என்.சேதுராமன் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment