'தமிழகத்தில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு குழுவும்,தமிழக அரசும் முழு வீச்சில் தயாராக உள்ளன. மாவட்ட அளவிலான அதிகாரிகள் அனைவரும், விடுமுறை நாளிலும் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 12ம் தேதி இரவு முதல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.ஏற்கனவே பெய்த மழை நீர் வடியாத நிலையில், 'இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழக கடலோர மாவட்டங்களில், கனமழை இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று கூறியதாவது:தென் கிழக்கு வங்கக் கடலில், நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து, தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.அது மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும். அதனால், அடுத்த மூன்று தினங்களில், பருவமழை தீவிரம் அடையும். இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், பலத்த மழை பெய்யும்; பிற மாவட்டங்களில், சில இடங்களில் பலத்த மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், இன்று மதியம் முதல், மணிக்கு, 40 கி.மீ., முதல், 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, கடலுக்குள் செல்வதை, மீனவர்கள் தவிர்க்க வேண்டும்;
பொதுமக்களும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தமிழகத்தில், கடந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக,துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில், தலா, 7 செ.மீ., மழை பெய்து உள்ளது; சென்னையில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு தயார்:
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் உள்ள, தேசிய பேரிடர் மீட்பு குழுவும், தமிழக அரசும் தயாராக உள்ளன. கனமழை தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் துறை கமிஷனர், அதுல்யா மிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, கனமழை பெய்யக்கூடும் என, தெரிவித்துள்ளது.எனவே, அனைத்து கலெக்டர்களும், உயிரிழப்பு மற்றும் சேதத்தை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், விடுமுறை நாளாக இருந்தாலும் அலுவலகம் வந்து, மழை தொடர்பானபணிகளை கவனிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களுக்கும், தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீட்பு பணியில் ஈடுபட, தேவையான குழுக்களை அமைக்க வேண்டும். அனைத்து துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து, மாவட்டம் இயல்பு நிலையில் இருக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை பின்பற்றி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மழையால் பாதிக்கப்படும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்:
முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட
அறிக்கை:'நவ., 15 முதல், 17ம் தேதி வரை, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும், மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும்' என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.எனவே, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாவட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் இருந்து, முன்எச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் யார் யார்?
மாவட்டம் பெயர்-அதிகாரி பெயர்
கடலுார்-ககன்தீப்சிங் பேடி
காஞ்சிபுரம்-ராஜாராமன்
திருவள்ளூர்-பிரபாகர்
வேலுார்-சபீதா
விழுப்புரம்-உதயச்சந்திரன்
நாகப்பட்டினம்-சிவ்தாஸ் மீனா
ராமநாதபுரம்-விஜயகுமார்
திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் - சத்யகோபால்
புதுக்கோட்டை- சமயமூர்த்தி
துாத்துக்குடி-குமார் ஜயந்த்
திருநெல்வேலி-செந்தில்குமார்
கன்னியாகுமரி-அதுல் ஆனந்த்
திருவண்ணாமலை-பிரதீப் யாதவ்
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி- ராஜேஷ் லக்கானி
No comments:
Post a Comment