இளமைப் பருவம் வாழ்க்கையின் வசந்தம்... இளமையில் நீங்கள் எப்படி உங்களை வளப்படுத்தி கொள்கின்றீர்களோ, அவ்வாறே உங்களின் எதிர்காலம் அமையும்!
பல தலைவர்களின் இளமைப் பருவத்தை வாசிப்பீர்களானால், அவர்களின் தலைமைப் பண்பு இளமையிலே மிளிர்ந்திருப்பதை காணமுடியும். “இளமையில் உழைக்கிற உழைப்பு தான், முதுமையில் வட்டியுடன் சேர்ந்து வருகிற சேமிப்பு பத்திரம்” என்கின்றார் கால்ட்டன்.
பள்ளிகளில், கல்லூரிகளில் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகின்றோம். தலைவர்கள் பிறந்தநாள் என்பது நமது பிறந்தநாளை போல் மிட்டாய் கொடுத்து மகிழ்ச்சியில் மறைவது அல்ல. தலைவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக நம்மை வளப்படுத்திக்கொள்ள உதவும் நன்னாள்... நம்மை மாற்றிக்கொள்ள ஏற்படுத்தி தரும் வாய்ப்பு!
காமராசர் இளமையில் விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் பேச்சை கேட்டதன் பயன், விடுதலை போராட்டத்தில் அவரை பங்கெடுக்க செய்தது. அதன் விளைவாக கர்மவீரர் காமராசர், இந்திய விடுதலை வரலாற்றில் கருப்பு காந்தியாக அறியப்படுகின்றார்; இன்றும் புகழ்ந்து பேசப்படுகின்றார்.
காமராசர் சிறுவனாக இருக்கும் போது தன் பள்ளியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், தன் ஆசிரியர் செய்தது தவறு, அனைவரிடமும் சமமாக காசு பெற்ற அவரே அனைவருக்கும் சமமாக சுண்டல் கொடுத்திருக்க வேண்டும், என உரக்க உண்மையை பேசினார். அந்த துணிவும் நேர்மையும் தவறை எடுத்துரைக்கும் பண்பும் பிற்காலத்தில் காமராசரை தமிழக காங்கிரஸ் தலைவராக உயர்த்தியது.
வரிசையில் நின்று சுண்டல் வாங்க வேண்டும் என்ற நேர்மை கடைசி வரை அவருடன் தங்கி, 9 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தாலும், தனக்காக, தன் குடும்பத்துக்காக, ஏன் தன் தாய்க்காக கூட பதவியை கொண்டு சுயலாபம் அடைய விடவில்லை. தனக்காக, தன் வீட்டின் முன் போடப்பட்ட குழாயை கூட அகற்ற செய்தார். இந்த நேர்மையே இன்று வரை தமிழக அரசியல் தலைவர்களிடம் ‘காமராசர் ஆட்சி’ தமிழகத்திற்கு வேண்டும் என்று கூற செய்கிறது!
‘என்னைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்” என்கிறார் திருவள்ளுவர்.
இளமையில் நல்ல விசயங்களை கேட்பீர்களானால், அந்த கேள்வி ஞானமே முதுமையில் உங்களுக்கு நல்ல பெருமையை சேர்க்கும். வெற்றிகளை தேடிதரும். இளமையில் நல்ல பழக்கம், நம்பிக்கை, குறிக்கோள் உறுதி இவைகளை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு நல்ல விசயங்களை பேசுங்கள், நல்லவற்றை சிந்தியுங்கள், நல்லவற்றை எழுதுங்கள். எல்லாம் நல்லவனவாக மாறும். வெற்றி உங்கள் வாயில் கதவை தட்டி நிற்கும்!
க.சரவணன், தலைமையாசிரியர், நேரு மேல்நிலைப்பள்ளி, மதுரை.
1 comment:
பெயா் மாற்றம் குறித்த அறிவரைகள் அடங்கிய அரசு ஆணை நகல் தேவை.GO.Ms.No.198 personnel and administrative reforms(A) department dt. 18.8.1998
Post a Comment