அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து புதுச்சேரி அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால், காங்., சார்பில் ஐகோர்ட்டில் நீதி கேட்போம் என முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியை, காங்., ஆட்சியில் காங்., தலைவி சோனியா திறந்து வைத்தார். காங்., ஆட்சிக் காலத்தில் மாணவர் சேர்க்கை வெளிப்படையாக, தகுதி அடிப்படையில் நடந்தது.
2011-ல் என்.ஆர். காங்., ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன. பல கோடி ரூபாய் கையூட்டு பெற்றுக்கொண்டு, தகுதி இல்லாதவர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லுாரியில் சீட் வழங்கப்பட்டுள்ளது என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ஊர்ஜிதம் செய்வது போல, பாம்பே எரிவாயு கழகத்தில் பணிபுரியும் ராஜேந்திரன் என்பவரிடம், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்து விட்டனர் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கோர்ட் உத்தரவின்படி, திருச்சி காவல் நிலைய போலீசார் குற்றவாளிகள் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., சீட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி யுள்ளது. எனவே, அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் கமிஷன், தகுதியில்லாத 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி அமர்த்தியது ஆகியவை குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், காங்., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நீதி கேட்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment