சூளகிரி அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். போதிய ஆசிரியரை நியமிக்காமல், தங்கள் பள்ளி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆத்திரமடைந்த மாணவர்கள், நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அடுத்த கீழ்முரசுபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த, 2005ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கீழ்முரசுபட்டி, மேல்முரசுபட்டி, கும்மனூர், ஓசஹள்ளி உட்பட, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 152 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில், ஆரம்ப காலத்தில் இருந்தே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையுள்ள
இந்த பள்ளியில், ஏழு ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். கடந்த, 2014ம் ஆண்டு, இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இரு ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த, இரு வாரங்களுக்கு முன், மூன்று ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். தற்போது பள்ளியில் தமிழ் ஆசிரியர் புனிதவள்ளி மட்டுமே, அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தி வருகிறார். போதிய ஆசிரியர்களை நியமிக்காமல், கீழ்முரசுப்பட்டி உயர்நிலைப்பள்ளியை, கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டித்து, அந்த பள்ளியில் படிக்கும், 152 மாணவர்களும், நேற்று பள்ளிக்குச் செல்லாமல், பள்ளி சீருடையுடன், ஆடு, மாடுகளை மேய்க்க புறப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில் இருந்து கால்நடைகளுடன் புறப்பட்ட மாணவ, மாணவியரை, இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் சின்னப்பா, பஞ்சாயத்து தலைவர் மாதையன் ஆகியோர் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாணவ, மாணவியர், நேற்று மாலை வரை, வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இவ்வளவு நடந்தும், ஓசூர் கல்வி மாவட்ட அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு உள்ளிட்ட எந்த ஒரு அதிகாரியும் பள்ளிக்கு வரவில்லை. இது தொடர்பாக விசாரிக்கவும் இல்லை. இது குறித்து கேட்க முதன்மை கல்வி அலுவலர் தமிழரசுவை மொபைல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.
No comments:
Post a Comment