வெற்றி சிலரின் ஏகபோகச் சொத்து அல்ல! அது ஒரு சாகரம்- கடல். வெற்றியைத் தேடிச் செல்கையில் நாம் எத்தனை பெரிய நம்பிக்கைப் பாத்திரத்தைச் சுமந்து செல்கின்றோமோ அந்த அளவில் வெற்றியைச் சுமந்து வரலாம்!
வெற்றி அடையக் கனவு காண வேண்டும் தான். ஆனால், “கனவுகளை சுமப்பது மட்டும் தான் வாழ்க்கை என்பது வெற்றியாளர்களின் கோட்பாடு அல்ல! கனவுகளைக் கரையேற்றுவதும், மேலும் பல கனவுகளைச் சுமக்கத்தயாராவதும் தான் வாழ்க்கை; வெற்றியாளர்களின் குறிக்கோளும் கூட!
‘வெற்றி பெற போராட வேண்டும்’ என்ற பொதுவான கருத்தை பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். போராட்டம் என்பது அவரவர் பார்வையில் மாறுபடுகிறது. உங்களுக்குப் போராட்டமாகத் தோன்றுவது மற்றொருவருக்கு சாதாரணமாகத் தோன்றலாம். மற்றொருவருக்கு போராட்டமாகத் தெரிவது உங்களுக்குச் சர்வ சாதாரணமாக தோன்றலாம்! எனவே போராட்டத்தினால் வெற்றி என்பது மனப் பிரமைதான்!
இன்றைய காலக்கட்டங்களில் வெற்றி பெற, நாம் சில, பல உத்திகளை மேற்கொண்டே ஆகவேண்டிய சூழ்நிலை. உத்திகள் இல்லாமல் வெற்றி கிடையாது! வாழ்க்கையும் சுவைக்காது!
வெற்றிக்கு வேண்டியது இலக்கு! இலக்கை அடையத் தேவை ‘தன்னம்பிக்கை, மன உறுதி, உழைப்பு’.
தன்னம்பிக்கை ஏற்பட, நாம் உபயோகிக்கப் போகும் உத்திகளின் பரிமாணம், அவற்றின் செயல் திறன், அவற்றின் மேல் உள்ள நமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் ‘கெமிஸ்ட்ரி’யும் முக்கியம்.
மன உறுதி ஏற்படத் தேவை ‘பாஸிடிவ்’ எண்ணங்கள், சிந்தனை எல்லாம்!
தற்கால அளவுகோலில் ‘டீம் ஒர்க்’ எனும் சமயோஜிதமான செயல் திறன் கொண்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசும் சிகர உழைப்பு அத்தியாவசியமானது. நிகர லாபம், சிகர உழைப்பிற்குத்தான்!
வெற்றியின் பூரண மகிழ்ச்சி அதற்குண்டான பலன் கையில் கிடைக்கும் வரைதான். எனவே, வென்றவன் வெற்றியின் நிழலில் இளைப்பாரிக்கொண்டிருக்க முடியாது. அவன் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெற்றி என்பது முடிவல்ல! ஒரு பயணம்! இலக்குகள் மாறும்பொழுது, பயணங்கள் தொடர்கின்றன!
அதற்காக, எப்போதும் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கை என்பதில்லை. தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராவதும் வாழ்க்கையின் அம்சம்தான்! தோல்வியின் மறுபக்கம் வெற்றிதான்!
-என்.சந்திரசேகரன், கோவை.
No comments:
Post a Comment