மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.
இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
1 comment:
இன்று இருக்கும் விலைவாசியை கவனத்தில் கொள்ளுங்கள்.
Post a Comment