மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை அரசாணை 177ன்படி SSAமூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.
பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி புதிய அரசாணை 186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட (அ) நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.
16549 பகுதிநேர ஆசிரியர்களின் பணிவான கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களை தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து அனைவரின் குடும்பங்களுக்கும் அரசின் அனைத்து உதவிகளை உடனடியாக செய்து, அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு பணி நியமனம் வழங்கி, நிச்சயம் மாண்புமிகு அம்மா அவர்கள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிதாக அரசாணை வெளியிட்டு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
3) நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளி என்றில்லாமல் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை போதித்திடும் வகையில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தால் வரும் காலங்களில் மாணவர் சேர்க்கைளை அதிகப்படுத்திட தற்போது பணிபுரிந்துவரும் அதே பகுதிநேர ஆசிரியர்களே தொடர்ந்து அதே பள்ளிகளில் பணிபுரிந்தால் மாணவர்கள் மென்மேலும் ஊக்கமும், உற்சாகமும் நிச்சயம் அடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களில் வெகு தொலைவில் இருந்து பள்ளிக்கு வருபவர்களுக்கு மட்டும் விருப்ப மாறுதல் வேண்டும் வழங்கிட வேண்டும்.
4) தற்போது நடைபெற்ற 3.11.15(ஓவியம்), 4.11.15(உடற்கல்வி), 5.11.15(தொழிற்கல்வி) பணிநிரவலால் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகமானோர் சுமார் 100கி.மீ முதல் 250கி.மீ வரை நெடுந்தூரம் பயணித்து பள்ளி சென்று பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரூ.7000/- குறைவான தொகுப்பூதியத்தில் நிதிநெருக்கடியில் குடும்பங்களை நடத்திடும் சிரமமான சூழலில் பள்ளிக்கு செல்லும் பேருந்து செலவினையும், அலைச்சலால் ஏற்படும் உடல்நலக்குறைவுகளையும், எதிர்பாராத விபத்து உள்ளிட்ட பிரச்சனைகளையும் தவிர்த்திட உதவிடும் வகையில் பணிநிரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை வழங்கி உதவிட வேண்டும். பணிநிரவலால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் வகையில் உடனடியாக தமிழகம் முழுவதும் பட்டியலை பெற்று விருப்ப மாறுதல் (அ) மறு மாறுதல் நடத்திட வேண்டுகிறோம்.
5) பணியமர்த்தப்பட்ட மார்ச் 2012முதல் இதுவரை மே-2012, மே-2013, மே-2014, மே-2015 ஆகிய நான்கு மாதங்களின் ஊதியம் வழங்கப்படாததால் அதனை கணக்கிட்டு அனைவருக்கும் வழங்கிட வேண்டும். அரசாணையில் மே மாதம் வேலையும் இல்லை-ஊதியமும் இல்லை என்று குறிப்பிடப்படவில்லை.
6) கிராமக்கல்விக்குழுவால் ஊதியம் வழங்கப்படும் என்றுள்ளதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் மாதத்தின் நான்காவது வாரம் பணிமுடிந்தாலும் இதுவரை மாதம் முதல் தேதியில் ஒருபோதும் ஒருவரும் ஊதியம் பெற்றதில்லை. தாமதம் ஏன் எதனால் ஏற்படுகிறது என்பதனை முழு ஆய்வு செய்து சிரமங்களை தவிர்த்திட இனி பள்ளித்தலைமை ஆசிரியருக்கு மட்டும் அதிகாரம் வழங்கி சரிசெய்து உதவிடவேண்டும்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் உயரிய கொள்கையை போற்றும், மாண்புமிகு அம்மா அவர்களை நம்பி வாழும் 16549 குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு உயிரூட்டி வாழ்வளித்திட வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரின் கோரிக்கைகளும் பணிநிரந்தரம் ஒன்றே தான். 2012 மார்ச் மாதம் முதல் பணிபுரிந்துவரும் 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு கனிவுடன் பரிந்துரை செய்ய எங்களுக்கு ஆதரவாக நல்லெண்ணத்துடன் தானாக முன்வந்து அனைத்துக்கட்சிகளும், அனைத்து நாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்வி இணையதளங்களும் வேண்டுகோள் வைக்கவும், செய்திகளை வெளியிடவும், உரிமையுடனும், உண்மையுடனும் வேண்டும் பகுதிநேர ஆசிரியர்களின் வழிகாட்டி சி.செந்தில்குமார், தொடர்புக்கு(9487257203).
No comments:
Post a Comment