இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய்த் துறை கமிஷனர் அதுல்யா மிஸ்ரா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழையை சமாளிக்க முடியாமல் சென்னை நகரம் திணறுகிறது. இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை கமிஷனர் அதுல்யா மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து கலெக்டர்களும் உயிரிழப்பு மற்றும் சேதத்தை தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், விடுமுறை நாளாக இருந்தாலும் அலுவலகம் வந்து மழை தொடர்பான பணிகளை கவனிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களுக்கும் தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்பு பணியில் ஈடுபட தேவையான குழுக்களை அமைக்க வேண்டும். அனைத்து துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மாவட்டம் இயல்பு நிலையில் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment