தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள், 3,000 பேரின், ஒருநாள் சம்பளத்தை, தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது.
சென்னை, பனகல் மாளிகை, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், அக்., 1ல் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, மயங்கி விழுந்து இறந்தார். இதற்கு, 'இயக்குனர் முனியநாதன் கொடுத்த, 'டார்ச்சரே' காரணம், அவரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்; மூர்த்தி குடும்பத்திற்கு நிவாரணத் தொகை, அவரது வாரிசுக்கு வேலை வேண்டும்' என, கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை வலியுறுத்தி, அக்., 6ல், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்; இதில், 3,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் பணிக்கு வரவில்லை எனக் கருதி, ஒருநாள் சம்பளமான, மொத்தம், 20 லட்சம் ரூபாயை அரசு பிடித்தம் செய்துள்ளது.
கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலர் சிலுப்பன் கூறியதாவது:தற்செயல் விடுப்புக்கு சம்பளம் பிடித்தது சரியல்ல. நிதி அமைச்சர் பரிந்துரைப்படி, நிதித்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலருடன் பேச உள்ளோம். தீர்வு கிடைக்கா விட்டால், பல கட்ட போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment