தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புதுச்சேரி அருகே திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்ததால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேற்காக நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும். இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வலுப்பெறும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். ஆர். ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வங்கக் கடலில் கடந்த வாரம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின் வலுவிழந்து கேரளம் அருகே புதன்கிழமை மேல் அடுக்குச் சுழற்சியாக நிலை கொண்டிருந்தது, அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வியாழக்கிழமை காலை தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதியில் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். குறிப்பாக, தென் மாவட்டங்களின் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வரும் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீண்டும் பலத்த மழை பெய்யும்.
பலத்தக் காற்று வீசும்: வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், அவ்வவ்போது வட கிழக்கிலிருந்து மணிக்கு 45 கி.மீட்டர் முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளிலும், தென் மேற்கிலிருந்து பலத்தக் காற்று வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
100 மி.மீ மழை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் 100 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 90 மி.மீ, மதுராந்தகத்தில் 80 மி.மீ, சென்னை விமான நிலையம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 70 மி,மீ, தாம்பரம், நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், கோவை மாவட்டம் அன்னூர், செங்கல்பட்டு, பழனி உள்ளிட்ட இடங்களில் 60 மி.மீட்டர் மழை பதிவானது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு என்றார் எஸ்.ஆர்.ரமணன்.
No comments:
Post a Comment