அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
மாணவர்கள் வறுமை காரணமாக தங்களுடைய படிப்பை இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் 14 விதமான விலையில்லாப் பொருள்களை வழங்கி மாணவர்கள் கல்வியைத் தொடர வழிவகுத்துள்ளார். கல்வி வளர்ச்சி அடைந்தால் தான் சுகாதாரம் வளரும். அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்ற அடிப்படையில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீத நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,163 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 150 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளன. வருகிற காலங்களிலும் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சிறந்த நிலையில் இருக்கும் என்றார் அமைச்சர் கே.சி.வீரமணி.
நிகழ்ச்சிக்கு இந்து கல்விச் சங்கத் தலைவர் சி. ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நந்தகுமார் வரவேற்றார். எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா, நகர்மன்றத் தலைவர் சங்கீதா, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணி, பேர்ணாம்பட்டு ஒன்றியக்குழுத் தலைவர் டி.பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கராத்தே மணி, அமீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியர் சி. குணசேகரன் நன்றி கூறினார்.
அமைச்சரிடம் மனு அளித்த மாணவிகள் : இந்து கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்க வேண்டுமெனக் கோரி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
No comments:
Post a Comment