மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, 6.4.2015ல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இதன் கன்வீனராக பேராசிரியர் முருகதாஸ், உறுப்பினர்களாக முன்னாள் பேராசிரியர் ராமசாமி (செனட்), ஹரீஷ் மேத்தா (சிண்டிகேட்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழு, இதுவரை ஐந்து முறை கூடி, புதிய துணைவேந்தர் பதவிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தது. விண்ணப்பித்தவர்களின் தகுதி மற்றும் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) வழிகாட்டுதல் அடிப்படையில் மூன்று பேரை தேர்வு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்வதற்கான இறுதி கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.
தாமதமாக துவங்கிய இக்கூட்டத்தில், கன்வீனர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடால் கூட்டத்தின் பாதியில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், மூவரை தேர்வு செய்து, கவர்னருக்கு பரிந்துரைக்க வேண்டிய இந்த முக்கிய கூட்டம், 25 நிமிடங்களில் முடிந்தது.
இதுகுறித்து உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியான 31.5.2015 முதல், கடைசி நாளான 24.7.2015 வரை 112 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில், 144 விண்ணப்பங்கள் என கணக்கு காட்டப்பட்டது. மேலும், கடைசி தேதிக்கு பின், 10.10.2015ல் கொடுக்கப்பட்ட ஒருவரின் விண்ணப்பத்தையும் மொத்த
விண்ணப்பங்களுடன் சேர்க்க வற்புறுத்தப்பட்டது. இதற்கு உடன்பட மறுத்து வெளிநடப்பு செய்ததோம், என்றார். கன்வீனர் முருகதாஸ் கூறுகையில், அறிவிப்பு வெளியாகும் முன்பே 30 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எதுவும் விடுபட்டு போகக் கூடாது என்பதற்காக அவையும் மொத்த விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட்டது. இதில் தவறு இல்லை. தேர்வுக் குழுவில் பெரிய அளவில் கருத்துவேறுபாடு இல்லை.
இனிநடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும், என்றார். கன்வீனருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment