தொடர் மழை பெய்ததன் காரணமாக, மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகளையும் பல்கலைக்கழகம் அறிவித்தது.
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் மழை பெய்தது. சென்னை உள்பட சில பகுதிகளில் புதன்கிழமையும் மழை பெய்தது.
இந்தத் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது.
இந்தப் பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமை நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள் முழுமையாகச் சீரடைந்து, மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி தேர்வெழுத வரும் வகையில் மேலும் இரண்டு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் இப்போது ஒத்திவைத்துள்ளது. அதாவது நவம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மறு தேதிகள்: ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகள் பல்கலைக்கழகத் துறைகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி) படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இதேபோல, பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 12-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதியிலும், நவம்பர் 13-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 22-ஆம் தேதியிலும், நவம்பர் 14-இல் நடத்தப்பட இருந்த தேர்வு டிசம்பர் 24-ஆம் தேதியிலும் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரம் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment