கடந்த மாதங்களில் விடப்பட்ட விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு, தொடர் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதனால், விளையாடுவதற்கு நேரமின்றி, மாணவர்களுக்கு மனக் கலக்கம் ஏற்படுகிறது.
20 நாட்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த, டிசம்பரில், ’நடா’ புயல், ஜெயலலிதா மரணம், ’வர்தா’ புயல் போன்ற காரணங்களால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.
புயல் சேதத்தில் பாதிப்படைந்த சில தனியார் பள்ளிகள், 20 நாட்கள் வரை, விடுமுறை அறிவித்திருந்தது. இதேபோல், கடந்த ஜனவரியிலும், பொங்கல் விடுமுறை, ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில், பொதுத் தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், கடந்த மாதங்களில் விடப்பட்ட தொடர் விடுமுறையால், பாடத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, விடுமுறை நாட்களில் தவற விட்ட பாடங்களை முடிக்கும் நோக்கில், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
இதுதவிர, சில தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன.
மாணவர்கள் பாதிப்பு
பொதுத் தேர்வு எழுத வுள்ள, 10, பிளஸ் ௨ மாணவர்களுக்கு, ஞாயிறு வகுப்புகள் எடுப்பதோடு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் அதிக சிரத்தை தரும் வகையில், வகுப்புகள் எடுப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல், பள்ளியில் உடற்கல்வி பாடப்பிரிவின் போது, விளையாட்டு, யோகாசனம், உடற்பயிற்சிகள் முதலியவை போதிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், ஒவ்வொரு விளையாட்டிலும், ஒரு குறிப்பிட்ட அணியைத் தவிர்த்து, பிற மாணவர்களுக்கு, விளையாட வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பல பள்ளி களின் விளையாட்டு மைதானங்கள், கடந்த சில நாட்களாகவே வெறிச்சோடியே கிடக்கின்றன.
No comments:
Post a Comment