படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற ரூ.15 கோடி செலவில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
தகுதித்தேர்வு
புதுவை அரசின் தொழிலாளர்துறை சார்பில் வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எழுத தயாராவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான தகுதி தேர்வு செல்லபெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நேற்று நடந்தது. இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களில் 754 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
கந்தசாமி ஆய்வு
தேர்வு மையத்தில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு நடத்தினார். அப்போது தொழிலாளர்துறை ஆணையர் வல்லவன், தேர்வு ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு, திறன் மேம்பாட்டு இயக்குனர் சாராங்கராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு எழுதியவர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
ரூ.15 கோடியில்...
இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:–
தொழிலாளர்துறை சார்பில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி அளிக்கும் வகுப்பில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
அதேபோல் கிராமப்புறத்தில் 2 இடங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசை அணுகி ரூ.15 கோடி நிதிபெற்று பயிற்சி மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளிலும் இதேபோல் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். இந்த சிறப்பு பயிற்சிகள் மூலம் இளைஞர்கள் எளிதாக வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
No comments:
Post a Comment