தமிழகம் மட்டுமல்லாமல் நாடே உற்று நோக்கிய வழக்கில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கினார். முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் பின் தமிழகம் அடுத்தடுத்து இதுவரை கண்டிராத பல சம்பவங்கள் அரங்கேறியது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் சசிகலா தரப்பால் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவின் அரசியல் கனவை தகர்த்தெறியும் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறைக்கு செல்கிறார் சசி:
சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நீதிமன்றம், உடனடியாக பொங்களூர் கீழமை நீதிமன்றத்திற்கு சென்று சரணடையுமாறு உத்தரவிட்டது.தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து மூவரும் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மூவரும் சரணடைந்த பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுவர்.
தேர்தலில் போட்டியிட முடியாது:
சசிகலாவி்ற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. சசிகலாவிற்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் போயஸ் தோட்டத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் காரணமாக சசிகலாவின் அரசியல் வாழ்க்கை தற்போது அஸ்தமனமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விவரங்கள்:
தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அதில், ஜெயலலிதா, சசிகலா நடராஜன், சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.இந்த வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா விசாரித்தார்.
அவர் கடந்த 2014 செப்டம்பர் 27ல் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியே 1 லட்சம், சசிகலா நடராஜன், சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவா ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 7 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த வாரம், கர்நாடகா அரசு சார்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பினாகி சந்திரகோஸ், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் எப்போது தீர்ப்பளிக்கப்படும்?’’ என்று நீதிபதிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘‘இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும்’’ என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இன்று வரலாற்று முக்கிய்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த 2015 ஜூன் 23ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2015 பிப்ரவரி 23ம் தொடங்கி இறுதி வாதம் நடைபெற்றது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும் வாதிட்டனர். ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்களும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே 4 நாட்களும் வாதிட்டனர். வழக்கின் இறுதி வாதம் மட்டும் 17 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
COURTESY : DINAKARAN
COURTESY : DINAKARAN
No comments:
Post a Comment