பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள், அரசு தேர்வுத்துறை கடந்த வாரத்தில் இணையதளம் மூலம் வெளியிட்டது.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்கு இதுவரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி வீதம் அதிகரிக்க பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகின்றனர். இவற்றில், பலவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
உதாரணமாக, பள்ளி வருகை பதிவேட்டில் இருந்த அனைவரும், தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ச்சி பெற முடியாது என, கருதும் மாணவர்களை தனித்தேர்வராக விண்ணப்பிப்பது பள்ளிகளின் வழக்கமாக இருந்தது.
இம்முறை அதற்கான வாய்ப்புகளை தேர்வுத்துறை தடுத்துவிட்டது. இதனால், அடுத்த கட்டமாக, சராசரி மாணவர்களை தேர்வெழுத விடாமல், முழுமையாக ஆப்சென்ட் ஆகும் வகையில், பல பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்காக, ஹால்டிக்கெட்டுகளை தராமல் இழுத்தடித்து வருகின்றன. இவற்றை உடனடியாக கொடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது
பிப்.,20க்குள் பிளஸ் 2 ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஹால்டிக்கெட்டுகளை வழங்கிவிட்டால், அதற்கு பின் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை.
ரிவிஷன் முறையாக நடக்காததால், தேர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது என, மாணவர்கள் நலன்கருதி பல பள்ளிகள் ஹால்டிக்கெட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. மற்றபடி, தேர்வெழுத தடுக்கும் வகையில், ஹால்டிக்கெட் தராமல் இருப்பின், அவர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment