பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த கல்வி ஆண்டுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 200 பள்ளிகள் மூலம் 14 ஆயிரத்து 649 மாணவர்கள், 16 ஆயிரத்து 878 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 527 பேர் மேல்நிலை தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 7 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலை தேர்விற்கு 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 20 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்விற்கு 83 முதன்மைக் கண்காணிப்பாளர், 83 துறை அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், தேர்வறை கண்காணிப்பு பணிக்கு 1621 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வறையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 240 ஆசிரியர்களை கொண்டு பறக்கும்படை மற்றும் நிலைப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பணி மேற்கொள்ளவுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 8 ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 410 பள்ளிகளில் இருந்து 18 ஆயிரத்து 722 மாணவர்கள், 18 ஆயிரத்து 553 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 275 மாணவ மாணவியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 118 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கட்டுகளை பாதுகாக்க 12 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வினாத்தாட்களை தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 28 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment