சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழா நடக்காததால், படிப்பை முடித்த, 10 லட்சம் மாணவர்கள், சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில், அண்ணா, சென்னை, மதுரை காமராஜர், மீன்வளம் மற்றும் சட்ட பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லை. அதேபோல, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளும் காலியாக உள்ளன. துணைவேந்தரை நியமித்தால் தான், முக்கிய பதவிகளையும் நிரப்ப முடியும்.இரண்டு ஆண்டாக இந்நிலையில், துணைவேந்தர் இல்லாததால், சென்னை பல்கலையில் இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் மட்டும் வழங்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன், உயர் கல்வி செயலர் கார்த்திக் கையெழுத்திட்டு, சான்றிதழ் வழங்கும் வகையில், பட்டமளிப்பு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், 'துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல், பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது' என, பேராசிரியர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகும், துணைவேந்தரை நியமிக்க, உயர் கல்வித்துறை கூடுதல் அக்கறை காட்டாததால், பட்டமளிப்பு விழா தொடர்ந்து தாமதமாகிறது.
இது குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: சென்னை பல்கலை யில், அரசு கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 125 கல்லுாரிகள் இணைப்பு பெற்றுள்ளன.
அனுமதி தரப்படும்: சென்னை பல்கலை யில் பட்டமளிப்பு விழா முடிந்த பிறகே, பல்கலை யின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி வழங்கப்படும். ஆனால், சென்னை பல்கலையிலேயே பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால், இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்க முடியவில்லை. பல்வேறு படிப்புகள் முடித்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர், சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, துணைவேந்தர் நியமன பணிகளை விரைந்து முடித்து, பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment