எவ்வளவோ வீடுகளையும், பலவகையான கட்டடங்களையும் நாம் அனுதினமும் காண்கிறோம். அவை அனைத்து கட்டடங்களும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பதில்லை!
மக்களின் ரசனைக்கும், வசதிக்கும் ஏற்ப திட்டம், வடிவமைப்பு, கட்டுமான பொருட்கள் என அனைத்தும் ஒவ்வொரு கட்டடத்திலும் மாறுபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய நமது நகரங்களுக்கும், தற்போதைய நகரங்களுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள்! வானுயர்ந்த அடுக்குமாடிக் கட்டடங்கள், பிரமிக்கவைக்கும் வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள், பாலங்கள் என வளர்ச்சி நம்மை பிரமிக்கவைக்கிறது! இந்த வளர்ச்சிக்கு பின்புலத்தில் இருப்பவர், ‘ஆர்கிடெக்ட்’!
தமிழகத்தில் மட்டும் 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், இந்தியாவிலேயே, 550 ஆர்க்டெக்ட் கல்லூரிகள் தான் உள்ளன. இதன்மூலம், 20 ஆயிரம் ‘ஆர்க்டெக்ட்’ மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியை முடித்து வெளியே வருகிறார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி’ போன்று அரசாங்கங்களே பல்வேறு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்துவதாலும், சஸ்டெய்னபில் டெவலப்மென்ட், லோ-காஸ்ட் கன்ஸ்ட்ரக்சன், கிரீன் பில்டிங் ஆகியவற்றின் வருகையாலும், ‘ஆர்கெட்க்ட்’களுக்கான தேவை என்பது இனிவரும் காலங்களில் மிக அதிகமாகவே இருக்கப்போகிறது.
‘ஆர்கிடெக்ட்’ ஆக விரும்பும் மாணவர், 5 ஆண்டு பி.ஆர்க்., படிப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! மற்ற தொழில்நுட்ப படிப்புகள் 4 ஆண்டுகள் என்கிறபோது, ஏன் பி.ஆர்க்., படிப்பிற்கு மட்டும் 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது? என்றால், இப்படிப்பு தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ரசனை இரண்டும் இணைந்த 100 சதவீத செயல்முறை படிப்பு.
வேறு படிப்புகளில் பாடத்திட்டத்திற்கும், செய்யும் பணிக்கும் இடைவெளி இருக்கும். படித்து முடித்த பின்பும் சில காலம் பயிற்சி பெற வேண்டியதிருக்கும். ஆனால், ஆர்கிடெக்சர் முற்றிலும் செயல்முறையிலான படிப்பு என்பதால், படித்து முடித்தபின் செய்ய வேண்டிய பணியை படிக்கும்போதே மாணவர்கள் செயல்முறையில் செய்து, அனுபவம் பெறுகிறார்கள்.
இது, ‘சாண்ட்விச்’ பாடத்திட்டம் மட்டுமல்லாது, மாணவர்களின் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்தும் வகையிலான பாடத்திட்டமும் கூட. அனைத்து செமஸ்டர்களிலும், செயல்முறை வடிவத்தைக் கொண்டுள்ள இப்படிப்பு குறித்த, சரியான புரிதலை இன்றைய மாணவர்களும், பெற்றோரும் பெற வேண்டும்.
‘நாட்டா’ என்ற நுழைவுத்தேர்வை எழுதினால் மட்டுமே இந்தியாவில் எந்த ஒரு கல்லூரியிலும் பி.ஆர்க்., படிக்க முடியும். இத்தேர்வில், கணிதம், பொதுத் திறன் மற்றும் வரைதல் ஆகிய மூன்று விதமான திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. எனவே, தனியார் பயிற்சி மையங்கள் பல, இத்தேர்வுக்கான பயிற்சியை கட்டணத்துடன் வழங்குகின்றன. ஆனால், இத்தேர்வுக்கான பயிற்சியை நாங்கள் இலவசமாகவே அளிக்கிறோம்!
கம்ப்யூட்டர் ஸ்டூடியோ, கிளைமாட்டலஜி லேப், பிளானிங் ஸ்டூடியோ, மெட்டீரியல் மியூசியம் போன்ற வசதிகளை, மாணவர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாது, கேஸ் ஸ்டடீஸ், பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், மாடல் மேக்கிங், சைட் விசிட், ஹேன்ட்ஸ் ஆன் டிரைனிங், இன்டர்ன்ஷிப், வொர்க்ஷாப் என திறன் மேம்பாட்டிற்கும் அதீத முக்கியத்துவம் அளிக்கிறோம்!
-எம்.உமாசக்கரவர்த்தி, முதல்வர், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அண்ட் பிளானிங், ஏ.வி.ஐ.டி., விநாயகா மிஷன் யுனிவர்சிட்டி, காஞ்சிபுரம்.
No comments:
Post a Comment