மருத்துவப் படிப்புக்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (மார்ச் 1) கடைசி நாள் என்ற நிலையில், தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதா, வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர, மத்திய அரசின், ’நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிலிருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்பு தலுக்கு அனுப்பியுள்ளது; இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், ’நீட்’ தேர்வுக்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.
இன்று நள்ளிரவு, 11:59 வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், இணையதள பதிவுகள் நிறுத்தப்படும். ’தேர்வுக்கான கட்டணத்தை இன்றே செலுத்த வேண்டும்’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழக மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்காததால், தற்போதைய நிலையில், தமிழக மாணவர்களும், நீட் தேர்வை எழுத வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
இது குறித்து, கல்வியாளர்கள் கூறுகையில், ’தமிழக மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், நீட் தேர்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிக்கலை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக, தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதே நல்லது’ என்றனர்.
No comments:
Post a Comment