பிளஸ் 2 தேர்வு, இன்று முடிய உள்ள நிலையில், ’நீட்’ தேர்வை எப்படி எழுதுவது என, அரசு பள்ளி மாணவர்கள், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்படுவர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல், ’நீட்’ தேர்வு அடிப்படையில் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில், ’நீட்’ தேர்வு, மே, 7ல், நடக்கிறது. இத்தேர்வில், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன் மூலம், தமிழக மாணவர்களுக்கும், ’நீட்’ தேர்வு கட்டாயமாகி உள்ளது.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: ’நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பெரும்பாலும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வை, இந்தாண்டு முதல் தமிழில் எழுதலாம்; அதற்கு அரசு பள்ளி மாணவர்கள் தயாராக உள்ளனர்.
ஆனால், தமிழ் வழி பயிற்சிகள் தரப்படுவது இல்லை. எனவே, ஏப்ரல் முழுவதும், அரசு பள்ளிகளில், ’நீட்’ தேர்வுக்கு, தமிழ் வழியில் பயிற்சி அளிக்க, மருத்துவம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment