ஆங்கில பாடத்தில், இலக்கண பகுதியில் பயிற்சி பெறாவிட்டால், தேர்வு முடிவுகளில், பின்தங்கும் அபாயம் உள்ளதாக, ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்கின்றன. பத்தாம் வகுப்பு பொருத்தவரை, தமிழ் முதல், இரண்டாம் தாள் தேர்வுகள் முடிவடைந்தன; ஆங்கிலம் முதல் தாள் தேர்வு, இன்று (மார்ச் 14ம் தேதி) நடக்கிறது; வரும் 16ம் தேதி, இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.
பெரும்பாலும் பொதுத்தேர்வு முடிவுகளை, பின்னுக்கு தள்ளும் பாடங்களுள், ஆங்கிலமும் ஒன்றாக உள்ளது. இத்தேர்வு, அதிக கவனமுடன் எதிர்கொள்வது அவசியம்.
மேலும், கடந்தாண்டு பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதும், தோல்வியை தழுவியதும், ஆங்கிலப்பாட தேர்வில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கோவை மாவட்டத்தில் இருந்து, 43 ஆயிரத்து 445 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது; 42 ஆயிரத்து 540 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இதில், 905 பேர் ’ஆப்சென்ட்’ ஆனதோடு, தேர்வு எழுதியவர்களுள், 886 பேர் தோல்வியை தழுவியதாக, பொதுத்தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில பாடத்தில் சென்டம் பெறுவது, மெல்ல குறைந்துவருகிறது.
கடந்த 2014ல், 71 பேரும், 2015ல் 76 மாணவர்களும், முழு மதிப்பெண்கள் எடுத்த நிலையில், கடந்தாண்டில் 12 பேர் மட்டுமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றனர். இதற்கு, சுயமாக எழுதும்படியான கேள்விகள் அதிகம் இடம்பெறுவதே காரணம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆங்கில பாட ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,
’மொழிப்பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் பட்சத்தில், மொத்த மதிப்பெண்கள் உயரும். ஆங்கிலப்பாட தேர்வில், மொழிநடை, இலக்கணம் குறித்து, பரிசோதிக்கும் நோக்கில், வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது.
படித்து, மனப்பாடம் செய்து எழுதும் பகுதிகள் குறைவாக இருப்பதால், மனப்பாடத்தை நம்பியுள்ள மாணவர்கள் அதிகளவில் தோல்வியை தழுவுகின்றனர். நடப்பு கல்வியாண்டிலாவது, ஆங்கில பாடத்திற்கு அதிக கவனம் செலுத்தி, படிப்பது அவசியம்.
இலக்கணம் பகுதியில் பயிற்சி பெறுவதோடு, பழைய பொதுத்தேர்வு வினாத்தாள்களுக்கு விடையளித்து, சுய பரிசோதனை செய்து கொண்டால், அதிக மதிப்பெண்கள் பெறலாம்’ என்றனர்.
No comments:
Post a Comment