”வெளிமாநிலத்தில், உயர் கல்வி படிக்க செல்லும் மாணவர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்யும்,” என, சட்டசபையில், முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்த, தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை, தி.மு.க., கொண்டு வந்தது.
அதன் மீது நடந்த விவாதம்:
தி.மு.க., - ராஜேந்திரன்: ஜவஹர்லால் நேரு பல்கலையில், ஆராய்ச்சி படிப்பு படித்த, சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியானது. ’அவரது இறப்பில் மர்மம் உள்ளது’ என, அவரது தந்தை கூறியுள்ளார்.
அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன், ’ஆய்வு மற்றும் நேர்காணலில் சமத்துவம் இல்லை’ என, தன் முகநுாலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், எய்ம்ஸ் மாணவர் சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
பின், அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே, முத்துகிருஷ்ணன் இறப்பு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தும்படி, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து உயர் கல்வி படிக்க, வெளி மாநிலங்களுக்கு ஏராளமான மாணவர்கள் செல்கின்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அவர்களுக்கான பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பை கண்காணிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: மாணவர் முத்துகிருஷ்ணன் மறைவு தொடர்பாக, டில்லி யில், வசந்த விஹார் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த, ஐந்து டாக்டர்கள் கொண்ட குழு, பிரேத பரிசோதனை செய்தது. அவரது உடல் சொந்த ஊர் வர, தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. அவரது குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தில், உயர் கல்வி படிக்க செல்கிற மாணவர்களுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை, தமிழக அரசு செய்யும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment