போலி சான்றிதழ்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், உயர்கல்வி சான்றிதழ்களில், ஆதார் எண் இணைப்பு உட்பட புதிய அம்சங்களை சேர்க்க பல்கலை, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2014ம் ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் பிற சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை இணைக்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியது. அதன்படி, அனைத்து சான்றிதழ்களும் தற்போது, ரகசிய பாதுகாப்பு எண்களுடனே அச்சிடப்பட்டு வருகின்றன.
இருப்பினும், போலி சான்றிதழ்கள் பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் பரவலாகியுள்ளது.போலிகளை களையெடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண், தனிப்பட்ட அடையாள எண் போன்ற புதிய அம்சங்களைச் சேர்க்க பல்கலைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்லுாரியின் பெயர், படித்த பாடப்பிரிவு, முழுநேரம், பகுதி நேரம் அல்லது தொலைதுார முறை ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, தெரிவித்துள்ளது. இக்கல்வியாண்டு முதலே புதிய அம்சங்களுடன் சான்றிதழ்களை வினியோகிக்க அறிவுறுத்தியுள்ளது.
பாரதியார் பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கிளாடியஸ் லீமா ரோஸ் கூறுகையில்,”யு.ஜி.சி., இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வரவில்லை. அதன்பின், உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.
No comments:
Post a Comment