பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.
எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment