பாரதியார் பல்கலை, தொலைதுார கல்வி மையத்தின் கீழ் செயல்படும், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.
நீதிமன்ற வழக்கு குறித்த, முழு தகவல்களை, பல்கலை மாணவர்களிடம் தெளிவுபடுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைப்படி, தொலைதுார கல்வி முறையில், தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு மையமான, சி.சி.ஐ.ஐ., பங்கேற்பு திட்டங்கள் மையமான, சி.பி.பி., பங்கேற்பு மற்றும் ஆன்லைன் திட்டங்கள் மையமான, சி.பி.ஓ.பி., ஆகிய பிரிவுகள் செயல்படுத்த, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இவை, பல்கலை அங்கீகாரத்துடன், தனியார் கல்வி மையங்களால் நடத்தப்படுகின்றன.
பாரதியார் பல்கலையின் கீழ், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்கள், இவ்வாறு செயல்பட்டு வருகின்றன.அங்கீகாரம் இல்லாத பாடங்கள் நடத்துதல், கூடுதல் கட்டணம், அடிப்படை வசதியின்மை போன்ற பல புகார்கள் கிளம்பியதால், இப்பிரிவுகளுக்கு, யு.ஜி.சி., தடைவிதித்துள்ளது. இருப்பினும், பாரதியார் பல்கலை தடைஉத்தரவை மீறி, பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், தனியார் கல்லுாரிகள் நலச்சங்கம் சார்பில், கடந்த ஓராண்டுக்கு முன், உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்தும், 'ரிட்' மனுவுக்கு, பாரதியார் பல்கலை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற வழக்கு குறித்த முழு தகவல்களை, மாணவர்களிடம் பல்கலை தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது.தனியார் கல்லுாரிகள் நலச்சங்க மாநில பொதுச் செயலர் கலீல் கூறுகையில், ''உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஓராண்டு கடந்தும், பாரதியார் பல்கலை பதில் மனு தாக்கல் செய்யாமல் அலட்சியமாக உள்ளது.
தற்போது, வழக்கு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.''தீர்ப்பின் முடிவில், இம்மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, வழக்கு விபரங்களை, மாணவர்களிடம் தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment