கல்வித்துறை செயலர், உயர் கல்வித்துறைக்கு இயக்குநர் பதவிகள் காலியாக உள்ளதால், பணிகள் முடங்கியுள்ளன.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் செயலராக இருந்தவர் ராகேஷ் சந்திரா, ௫௯; ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், புதுச்சேரி கல்வித் துறை செயலராக பதவி வகித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் நாராயணசாமியுடன் டில்லி சென்ற ராகேஷ் சந்திரா, அங்குள்ள புதுச்சேரி அரசு விருந்தினர் மாளிகையில் ஜூலை 20ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ராகேஷ் சந்திரா மறைவுக்கு பிறகு, கல்வித் துறைக்கு தனி செயலர் நியமிக்கப்படவில்லை. மற்ற துறைகளை கவனித்து வந்த துறை செயலர்கள், கல்வித்துறையை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இதுபோல், உயர் கல்வித்துறை இயக்குநர் பதவி வகித்து வந்த கரிகாலன் இடமாற்றம் செய்யப்பட்ட பின்பு, இப்பதவியும் காலியாக உள்ளது.
கூடுதல் பொறுப்பு அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால், பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் கீழ் புதிய திட்டங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் முடங்கி கிடக்கிறது.
ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட, வழக்கமான பணிகள் மட்டும் நடக்கிறது. கல்வித்துறை செயலர் பணியிடம் மற்றும் உயர் கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என கல்லுாரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment