திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
காவலுார் விண்வெளி ஆய்வு மையம் அருகில் சென்றபோது, அப்பகுதியில் மான் நடமாட்டம் உள்ளதால், அங்கே வேட்டையாடிய யாரோ, மானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அது குறி தவறி தலைமையாசிரியர் முனிரத்தினத்தின் முதுகில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து, ஜமுனாமரத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், துப்பாக்கியால் சுட்டவர் யார் என தெரியவில்லை. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அரசு மருத்துவமனையில் இருந்து முனிரத்தினத்தை, அவரது குடும்பத்தினர் நாயக்கனுாரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். அங்கு அவருக்கு நாட்டு வைத்தியம் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முனிரத்தினம், துப்பாக்கி குண்டு காயத்தால் மேலும் பாதிப்படைந்து, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
No comments:
Post a Comment