பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டும் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் எந்த பள்ளியும் அதை செயல்படுத்தவில்லை. இதனால் மாணவர்களின் ஒழுக்கம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. முன்பு அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்திற்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன.
இதனால் தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. காலப்போக்கில் அவ்வகுப்புகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
மதுஅருந்தும் பழக்கம்
அவ்வகுப்புகளுக்காக செலவிடப்பட்ட நேரத்தை எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் என்ற பெயரில் விதவிதமான வகுப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டன. தற்போது 8ம் வகுப்பு மாணவன்கூட மதுகுடிக்கும் நிலை உள்ளது. மாணவிகளும் சிலர் மதுஅருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர அலைபேகளின் மூலம் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடும் நிலை உள்ளது. இதனால் நல்ல மனநிலையில் உள்ள மாணவர்கூட கெடும் வகையில் பல்வேறு சீர்கேடுகள் நிறைந்துள்ளது.
அரசு பள்ளிகளே மதிக்கல
இதை மாற்றுவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை பள்ளிகளில் கட்டாயமாக நீதிபோதனை வகுப்புகளை நடத்த உத்தரவிட்டது. பள்ளிகள் திறந்து இருமாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விருதுநகர் மாவட்டத்தில் எந்த பள்ளியிலும் அவ்வகுப்புகள் நடத்தப்படவில்லை. அரசு பள்ளிகளிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு பள்ளிகளே அரசின் உத்தரவை மதிக்காத போது தனியார் பள்ளிகளை பற்றி கூறவேண்டியதில்லை. இந்த அலட்சியப்போக்கால் மாணவர்களின் ஒழுக்கம் நாளுக்கு நாள் மோசமடைகிறது.
அவசியம் நடவடிக்கை
மகாராஜபுரம் ராமராஜ் கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வியைவிட ஒழுக்கம்தான் நிறைய தேவைப்படுகிறது. டாஸ்மாக் கடைக்கு மாணவர்கள் தைரியமாக வருகிறார்கள். அலைபேசிகளை வைத்து தவறான காரியங்கள் செய்கிறார்கள். அரசு உத்தரவை அமல்படுத்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.
No comments:
Post a Comment