90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் கருத்துரங்கம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அவர்,
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் பிரதான கடமை அரசுக்கே உண்டு. ஆனால், அரசு தன்னுடைய பணியைச் செய்யாததால் ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையில் ஒரு அரசுப்பள்ளிகூட மூடப்படவில்லை என்கிறார் அமைச்சர். தர்மபுரி மாவட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் உள்ள அரசுத்தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் மட்டும் 4 பேர் படித்தனர். இந்த ஆண்டு அந்த 4 பேரும் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டதால் அந்தப் பள்ளிக்கூடம் பூட்டுப்போட்டு மூடப்பட்டுக் கிடக்கிறது. இதற்கு அமைச்சரின் பதில் என்ன? மூடப்பட்டது என்பதற்குப் பதிலாக இன்னொரு பள்ளியோரு இணைக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை ஜாலத்தால் ஆட்சியாளர்கள் உண்மையை மறைக்கின்றனர்.
2011-12-ம் ஆண்டுகளில் 25.55 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-16-ம் ஆண்டுகளில் 38.05 லட்சமாக அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால், அரசுப்பள்ளி குறித்த விபரம் ஏதும் தரப்படவில்லை. தென் மாவட்டங்களில் இயங்கி வந்த 200-க்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் பல தற்பொரு ஒரு இலக்கத்திலேயே மாணவர்கள் இருக்கின்றனர். 2007-ம் ஆண்டு 2.44 லட்சமாக இருந்த ஆதிதிராவிடர் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 1.54 லட்சமாக சுருங்கிவிட்டது. தலைநகர் சென்னையில் 54 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
90 சதவிகிதம் உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில் பள்ளிக்கல்வியையும் முழுவதும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்விநிறுவனங்களை நடத்துவதே இதற்குக் காரணம்.
இந்தச் சூழலில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பல அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் அழகான இயற்கை சூழலோடு மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த ஊரிலிருந்து ஒரு குழந்தைகூட தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. வெறும் 11 மாணவர்கள் மட்டுமே இருந்த வல்லம்பக்காடு அரசுத் தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 89 மாணவர்கள் படிக்கின்றனர். 72 மாணவர்களாக இருந்த புதுக்கோட்டை காந்தி நகர் உயர்நிலைப்பள்ளில் தற்பொழுது 144 பேர் படிக்கின்றனர். இதில் 142 பேர் தலித் மாணவர்களாக உள்ள இப்பள்ளி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறது. 3 மாணவர்கள் மட்டுமே இருந்த பெரியசெங்கீரை தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 54 பேர் படிக்கின்றனர். 7 மாணவர்கள் மட்டுமே இருந்த புதுக்கோட்டை தர்மாஜ்பிள்ளை தொடக்கப்பள்ளியில் வாலிபர் சங்கத்தினரின் தீவிர முயற்சியால் தற்பொழுது 59 பேர் படிக்கின்றனர். உடையாளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வுக்கு கடந்த ஆண்டு மட்டும் 25 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 22 பள்ளிகளை தேர்வு செய்து இங்கு விருது வழங்கப்படுகிறது. இத்தகைய சாதனைக்கு பள்ளி ஆசிரியர்களின் தீவிரமான உழைப்பும், ஊர்பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம். சிறப்பாக செயல்பட்ட சில பள்ளிகள் விடுபட்டு இருக்கலாம். இத்தகைய சாதனைகள் அடுத்தடுத்த பள்ளிகளுக்கும் தொடர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment