மண்டபம் யூனியன் தேர்போகி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் கிராம இளைஞர்களின் முயற்சியில் தரம் உயர்ந்து மாணவர் சேர்க்கை ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் ஏதும் இன்றி வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளதால் மாணவர்களை சேர்க்கைக்கு தேடக்கூடிய சூழலுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இதனால், கிராமங்களில் வசிக்கும் பலரும் தொலை தூரத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்கத் துடிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடமே கற்றுக் கொடுப்பதில்லை என்ற பொதுவான சிந்தனையும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததாலும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் அரசு நடுநிலைப் பள்ளியை நாடி பெற்றோர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளனர்.
மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட தேர்போகி ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியை பயில அவர்களின் பெற்றோர்கள் அருகே உள்ள மண்டபம், பனைக்குளம், உச்சிப்புளி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிகளில் அனுப்பி வந்தனர். இதனால் ஆரம்ப காலத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த பள்ளியில் நாளடைவில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து நிலையில் பள்ளியை மூடி விடலாமே என்று யோசிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய எர்சலின் ராணி தனது சக ஆசிரியர்களான மேகலா, சுரேஷ் கண்ணன்,குருநாணேஸ்வரி, கணேஷ்குமார், ஜெயலட்சுமி ஆகியோருடன் தேர்போகி கிராம இளைஞர்கள் நடத்தும் திருக்குறள் மன்றத்துடன் இணைந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுவரோட்டி ஒட்டி, மாணவர்களைக் கொண்டு பேரணி நடத்தி பின்னர் வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளியில் நடப்பாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்காக அழைப்பு விடுத்தனர்.
பின்னர் கிராம கூட்டத்தை கூட்டி பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள், ''தங்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வேண்டும், அனைத்து வகுப்புகளிலும் தனித்தனி ஆசிரியர்கள் வேண்டும், எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இவை அனைத்தும் செய்து தருவதாக பள்ளி ஆசிரியர்களும் கிராம இளைஞர்களும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்த பின்னர் சிறிது சிறிதாக தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதன் பயனாக கடந்த ஆண்டு 48 ஆக இருந்த மாணவ எண்ணிக்கை இந்த ஆண்டு 94 ஆக இரண்டு மடங்காக மாணவர்களின் உயர்ந்துள்ளது.
(பள்ளி சேர்க்கைக்காக நடத்தப்பட்ட பேரணி)
கிராம மக்களின் ஒத்துழைப்பு
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சகாய எர்சலின் ராணி கூறும்போது, " பள்ளியின் அடிப்படைத் தேவைகளான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியுள்ளோம். இதற்காக இந்தாண்டுக்காண மத்திய அரசின் புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகியுள்ளோம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரியர் வேண்டும் என பெற்றோர்கள் கேட்டதால் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து ஒரு ஆசிரியரை நியமித்துள்ளோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் தினசரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியும் முறையாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் எங்கள் மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயார் படுத்தி வருகிறோம். மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி சமச்சீர் ஆங்கில வழிக்கல்வி எதிர்வரும் கல்வியாண்டில் வழங்க ஆயத்தமாகி வருகிறோம், என்றார்.
அரும்பும், மலரும்
தேர்போகி திருக்குறள் மன்றத்தில் தலைவர் இன்பராஜ் கூறியதாவது,
பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்திலிருந்து விடுபட மாணவர்களுக்கு சீருடையுடன் டை, அடையாள அட்டைகளில், பெயர் முகவரியுடன் பெற்றோர்களின் தொடர்பு எண் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்தோம். பெற்றோர்கள் கருத்தறியும் கூட்டத்தில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி சேர்க்கை வேண்டும் என்றனர். அரசு பள்ளியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி துவங்க முடியாது என்பதால் திருக்குறள் மன்றத்தின் சார்பாக அரும்பும், மலரும் என்ற பெயரில் தேர்போகி அரசுப் பள்ளி அருகேயே உள்ள கிராம சபை கட்டித்தில் இரண்டு ஆசிரியர் மற்றும் ஒரு உதவியாளருடன் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்கினோம். தற்போது அரும்பும் மலரில் 29 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் யு.கே.ஜி முடித்ததும் நேராக தேர்போகி அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.
எங்கள் கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு தருவதால் தேர்போகி அரசு நடுநிலைப் பள்ளியை விரைவில் விரைவில் இன்டர் வசதியுடன் கூடிய கணினி, எல்.சி.டி. ப்ரொஜெக்டர்களும் அளித்து ஸ்மார்ட் பள்ளியாக மாற்றுவதற்காக ஆசிரியர்களும், மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் கடுமையாக உழைத்து வருகிறோம், என்றார்.
No comments:
Post a Comment