திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே கருமாரப்பட்டி கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
புகார்:
இங்கு பணிபுரியும் ஆசிரியர் கருணாநிதி, தினமும் பள்ளிக்கு வரும்போது, மது குடித்து போதையில் வருவதும், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், படுத்து துாங்கி வருவதாகவும், சில நேரங்களில் மாணவர்களை தாக்குவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
உறுதி:
இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளிக்கு சென்ற போது, ஆசிரியர் கருணாநிதி, போதையில், மாணவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். மாணவர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த மங்கலம் போலீசார், தாசில்தார் முருகன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, ஆசிரியர் கருணாநிதியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, பகல், 12:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு, மாணவர்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment