மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என்பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
ஊழியர்கள் வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் காலத்தை தங்கள் வசதிக்கேற்ப நீட்டித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 75 வயது வரை வீட்டுக் கடனை திரும்ப செலுத்த சலுகை அளிக்கப்படும் என வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது. வீட்டுக் கடனை திரும்ப அளிக்கும் வயது 70 வரை உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு என ``முன்னுரிமை வீட்டுக் கடன்’’ மற்றும் ராணுவத்தினருக்கென ``சவுகரிய வீட்டுக் கடன்’’ எனும் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு சலுகை திட்டங்களில் கடன் பெறுவோர் ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடன் திட்டங்களுக்கான வட்டி விகித்தைக் காட்டிலும் குறைந்த வட்டியில் கடன் பெறுவர்.
ஊழியர்கள் தங்களுக்கு எந்த அளவுக்குக் கடன் கிடைக்கும் என்பதை இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுத் துறையுடன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சலுகைத் திட்டத்தில் பரிசீலனைக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்டப்டுள்ளது.
பிற வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்துவோர், அந்தக் கடனை எஸ்பிஐ-க்கு இந்த சலுகைத் திட்டத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது. ஓய்வுக் காலத்தில் திரும்ப செலுத்தும் கடன் அளவு குறையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசின் ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதலாகக் கிடைக்கும் தொகையின் மூலம் வீடு வாங்குவது மற்றும் பெரிய வீடுகளுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளை ஊழியர்கள் மேற்கொள்ளலாம். அதற்கு உதவும் வகையில் எளிய தவணையில் கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவிக்கிறது
No comments:
Post a Comment