திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் 219 அரசு உதவிப் பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் 42 உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 31 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 219 உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என 1153 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 1127 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உபரியாக உள்ளன.
அதே போல், 42 நடுநிலைப் பள்ளிகளுக்கு 569 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதில், 552 ஆசிரியர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இதில் 135-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உபரியாக உள்ளன. மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 290-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உபரியாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 20-க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், நிகழாண்டில் மட்டும் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதையடுத்து, அந்த பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட்டு, மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1 கோடிக்கும் மேல் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில், இடைவெளியின்றி பல ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், உதவி பெறும் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகளை, உபரியாக உள்ள ஆசிரியர்களும் இணைந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல அரசுப் பள்ளிகளிலும், சில அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, உபரியாக பணியாற்றி வரும் 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களுக்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன், மாநில கணக்காயரின் தணிக்கை நடைபெற்றது. அப்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி பணியிடங்கள் மூலம் ஒரு மாவட்டத்தில் மட்டும் ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டது. அதுபோன்ற சூழல் ஏற்படும் முன், உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வித்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து, தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசின் வழிகாட்டுதலின் படியே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment