கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கும் விதமாக, இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது, என, சி.இ.ஓ., தெரிவித்தார். பிளஸ் 2 பாடத்தில், கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு இலவசமாக கையேடு வழங்குவதற்கு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சி.இ.ஓ., அய்யண்ணன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆங்கிலம், கணிதம், கணக்கு பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கையேடு தற்போது அச்சாகி வந்துள்ளது. தலா, 5,000 கையேடுகள் வழங்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்துக்கான கையேடு, இன்றும் ஒரு வாரத்தில் அச்சாகி வரும்.
கல்வியில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவியருக்கு மட்டும், கையேடு வழங்கப்படும். இக்கையேட்டுக்கு அதிகம் தேவை இருந்தால், மீண்டும் பிரின்ட் செய்து வழங்கப்படும். தமிழ் பாடத்துக்கு கையேடு இல்லை. அரசு மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவனங்களும், கையேட்டை ஸ்பான்சர் செய்துள்ளன. பாட வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு, மாதிரி கையேட்டை தயாரித்து, சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறைக்கு அனுப்பினோம். அவர்களது ஒப்புதல்படியே, கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் மாணவ, மாணவியருக்கு கையேடு வழங்கப்படும்.
எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் அனைத்து பாடத்துக்குமான கையேடு, பிரின்ட் ஆகி வருகிறது. 15 அல்லது, 20 நாட்களில் அதுவும் வழங்கப்படும். மிட் டேம் தேர்வின் போது, கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மட்டும் கையேடு வழங்கப்படும். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களை, இந்த கல்வி ஆண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். இரண்டு உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளிகளாகவும், மூன்று நடுநிலைப்பள்ளி உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்த வேண்டும், என்று அரசுக்கு பரிந்துரைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment