மெல்ல கற்கும் (ஸ்லோ லேனர்ஸ்) மாணவர்களுக்காக, பள்ளிகளில் காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக, முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பெருந்துறையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவிலான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் வளர் பயிற்சி நேற்று ஈரோட்டில் வழங்கப்பட்டது. பயிற்சி நிறுவன முதல்வர் லக்குமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்து பேசினார். முதுநிலை விரிவுரையாளர் நாகலட்சுமி, சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தை சேர்ந்த இயற்பியல் பாடப்பிரிவு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யவும், 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கனவே பிற பாடங்களுக்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக, நேற்று இயற்பியல் பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக, இதுபோன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பங்கேற்று இருப்பதால், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பயிற்சி வகுப்பு வாய்ப்பாக அமைகிறது, என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: கடந்த, எட்டு நாட்களில், ஒன்பது பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் எந்த மாணவரும் தோல்வி அடைந்து, பள்ளியை விட்டு செல்லக் கூடாது. இது குரூப் டிஸ்கஷன் தான். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாட பிரிவில், கடந்தாண்டு அதிக தோல்வி இல்லை. இந்த பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள், குறைந்த எண்ணிக்கையில் தான், இந்த பாட பிரிவுகளை படிக்கின்றனர்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்காக, பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவனையும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நோக்கம். இயற்பியலில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment