அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆக., 31ம் தேதி கணக்கின்படி, மாணவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், பல மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், திடீர் ஆய்வு நடத்த துவங்கியுள்ளனர்.
ஆய்வின் போது, பள்ளி பதிவேடு விவரத்துடன், வகுப்பறையில் இருக்கும் மாணவர் எண்ணிக்கையை ஒப்பிட்டு அறிக்கை தயார் செய்கின்றனர். போதுமான மாணவர் எண்ணிக்கையில்லாமல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு, பாடம் நடத்தாமல் செல்வது குறித்தும் அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆசிரியர்கள் யார்; அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment