தலைப்பை படித்ததும், கடின உழைப்பின் மூலம் மட்டுமே தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக்கொண்ட காலம் மலையேறிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றலாம்!
தங்களது பெற்றோர்கள் பட்ட கஷ்டத்தில் 10 சதவீதம் கூட பட தயாராக இல்லாத இளைஞர்களை இன்று அதிகளவில் காண முடிகிறது. அதேசமயம், கடும் வேலை பளுவால், நான் யார்? என்பதையே அறியாமல் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவர்களுக்கு இடையே, வேலை பளுவின்றி அதிகம் சம்பாதிக்கும் துறையை உலகம் முழுவதும் இன்று அதிகமானோர் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் நிஜம்.
காலக்கெடு, வேலைப் பளு என கஷ்டப்படாமல் செய்யக்கூடிய சில வேலைகளை இனி பார்ப்போம்.
வானியல் ஆராய்ச்சியாளர்கள்: ஏற்கனவே கற்று தேர்ந்த தங்களது அறிவை மேம்படுத்துவதே இவர்களது முக்கிய குறிக்கோள். வானியல் ஆராய்ச்சிக்கான புதிய கருவிகள் கண்டறிவதில் பெரும்பாலான வானியல் ஆய்வர்கள் ஈடுபடுகின்றனர். சிலர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ. 9 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள்: இன்று பலரும் விரும்பும் பணியாக பேராசிரியர் பணி உள்ளது. காரணம், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் பெரிதும் இல்லை. உத்திராவாதமான ஊதியமும் இவர்களுக்கு உண்டு. அதேசமயம், பணியின் மீதான மதிப்பு, ஆர்வம், காலம் தவறாமை ஆகியவை முக்கியம். ஊதியம் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை.
ஊட்டச்சத்தாளர்கள் (டயட்டீசியன்): ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த பணியில், காலக்கெடுவுக்குள் முடித்தாகவேண்டிய அவசர வேலை இல்லை. நட்புடன் பழகும் குணமும், உணவு துறையின் மாற்றங்களை தொடர்ந்து அறிந்துகொள்வதும் அவசியமானது. ஊதியம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை.
இவர்களைப் போல, புவி ஆராய்ச்சியாளர்கள் (ஜியோ சயின்டிஸ்ட்ஸ்) - ஊதியம் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை, வணிக ஆய்வு நிபுணர்கள் (பிசினஸ் அனலட்டிக்ஸ் எக்ஸ்பர்ட்) - ஊதியம் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை, பிசினஸ் கன்சல்டன்சி - வருமானம் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை, பயோமெடிக்கல் இன்ஜினியர் - ஊதியம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை, நூலகர்கள் - ஊதியம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆகிய பணிகளையும் கூறலாம்!
கஷ்டமில்லாமல் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்றாலும், அப்பணிக்குரிய அறிவும், திறமையும், அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment