இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்ல வரும், தலைமை ஆசிரியர்களிடம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கடும் அதிருப்தி நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில், 1, 111 அரசு மற்றும் நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளும், 378 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல்பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 5ம் தேதி துவங்குகின்றன. பள்ளி திறக்கும் நாளன்று, விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம், கிரையான்ஸ் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், செப்., 29ம் தேதியன்று வந்து சேகரித்து செல்ல உத்தரவிட்டுள்ளது. பொருட்களை எடுக்க வரும் தலைமை ஆசிரியர்கள், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கொடுத்து செல்ல வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர் கூறியதாவது: சேலம் ஜங்சனில் இருந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு, புத்தகம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்த போக்குவரத்து செலவுகளை ஈடுசெய்ய, தலைமை ஆசிரியர்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாவது, சில்லறை செலவினங்கள் என்ற தலைப்பில், இந்த செலவுகளுக்கு பணத்தை பயன்படுத்த முடியும். ஆனால், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்தியே, புத்தகம் உள்ளிட்டவைகளை எடுத்து வர வேண்டியுள்ளது.
அந்த செலவுகளுக்கே என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, இதில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின், வசூல் வேட்டை, மேலும் அவதிக்குள்ளாக்குள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்துவது தவறு. உடனடியாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை எச்சரிக்கை செய்கிறேன், என்றார்.
No comments:
Post a Comment