மக்கள், பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம், ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்கு, பாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான், இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது.
டில்லி ரயில் நிலையத்திற்கு, ஒரு நாளைக்கு, 289 ரயில்கள் வந்து செல்கின்றன; இவற்றில் வந்திறங்கும் ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கு ஆதரவு கரம் நீட்டும் பணியில், சலாம் பாலக் டிரஸ்ட் எஸ்.பி.டி., என்ற தொண்டுநிறுவனம் ஈடுபட்டு உள்ளது. வீட்டை விட்டு ஓடிவந்தோர், வழி தவறியோர் என, போலீஸ் துணையுடன் கண்டுபிடிக்கப்படும் சிறார்களுக்கு, ரயில் நிலையத்தில் உள்ள, காவல் நிலையம் தான் முதல் புகலிடம்.
எஸ்.பி.டி., உறுப்பினர்கள், ரயில்வே போலீசில், சிறார்களின் விவரங்களை பதிவு செய்து, அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதன்பின், சிறார் நல்வாழ்வு கமிட்டிக்கு தெரிவித்து, பெற்றோரிடம் சேர்க்க முயல்கின்றனர்.
ஆனால், வீடு திரும்ப மறுக்கும் சிறார்களை என்ன செய்வது? அப்படிப்பட்ட சிறுவர்களுக்காக, காவல் நிலையத்திலேயே, குட்டி வகுப்பறையை, செட் அப் செய்து விட்டனர். அங்கு, கதைப் புத்தகங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என, குழந்தைகளுக்கான அனைத்து சமாச்சாரங்களும் உள்ளன. அத்துடன், குழந்தைகளுக்கு, தினமும் ஆசிரியர் மூலம் பாடமும் கற்றுத் தரப்படுகிறது.
ஆதரவற்ற சிறார்கள் மட்டுமின்றி, டில்லியின் சுற்றுப்பகுதியில் உள்ள, அனாதை சிறார்களும், காவல் நிலையத்திற்கு வந்து பாடம் கற்கின்றனர். இந்த வகையில், 25 சிறுவர், சிறுமியருடன், மினி பள்ளிக்கூடத்துடன், காவல் நிலையம் இயங்குகிறது. அப்படி வந்த, பல ஆதரவற்ற சிறுவர்களை நாங்கள் தத்தெடுத்து, கல்வி போதித்ததில், பலர், இன்று பொறியாளர்களாகவும், ஆடை வடிவமைப் பாளர்களாகவும், புகைப்பட கலைஞர்களாகவும் உள்ளனர், என, பெருமையுடன் கூறுகிறார், எஸ்.பி.டி., செயல் இயக்குனர் பார்வதி பத்னி.
காவல் நிலையம் என்றாலே, அஞ்சும் சமூகத்தில், டில்லி ரயில்வே காவல் நிலையம், பலர் கண்ணியமாக வாழ, அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பதும்; கொடுத்து வருவதும் பாராட்டுக் குரியது.
No comments:
Post a Comment